*
பெங்களூரு -
கூர்க் பயணத்தடத்தில் இன்னொரு இடம் -
குஷால் நகர். திபேத்தியர்களுக்கென்று
கொடுக்கப்பட்ட இடமாம். எங்கும் சிகப்பாடை அணிந்த புத்த பிக்குகள். எல்லா
வயதிலும் நடமாடிக்கொண்டு இருந்தார்கள். சின்னப் பையன்களாக பலரும்
இருந்தனர்.
அது சரி ... சின்ன வயதிலேயே ‘ஆணி’ அடித்தால் தானே ‘மதம்’ உள்ளே இறங்கும். ஒரு சின்ன சந்தேகம். பெண் பிக்குணிகளும் இருப்பார்களோ?
|
பெண் பிக்குணிகள் ..??? |
ஏனெனில் பல ஆண்களுக்கு நடுவில் சில பெண்கள் பிக்குணிகள்
மாதிரி தோன்றினார்கள். மிக அழகான இளம் வயதுப் பெண்கள் சிலரை அப்படிப்
பார்த்தேன். அவர்களின் கைகளிலும் -அதற்கு என்ன பெயர் என்று தெரியாது;
எனக்குத் தெரிந்த பெயரைச் சொல்கிறேன். - ஜெபமாலை, ஆண்கள் போலவே
வைத்திருந்தார்கள். இதென்ன இந்த ஜெபமாலை எல்லா மதத்தினரும் வைத்து
உருட்டுகிறார்கள். ஜெபமாலையின் பரிணாமம் படிக்க யாராவது முயற்சிய்ங்களேன்!
முன்
வாசலில் இடது பக்க படத்தில் இருப்பது போன்ற ஒரு தோரண வாயில். அதில்
ஒருவரது படம் பெரியதாக இருந்தது. அவர் யார்? லாமா இல்லை அவர் என்பது
மட்டும் தெரிந்தது.
அவர்கள்
கோவில். உள்ளே பெரிய டமாரம் ஒன்று இருந்தது. நாங்கள் போகும்போது சின்ன
புத்த பிக்குகள் எல்லோரும் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தார்கள்.
அதிலிருந்த சின்னப் பையன்களைப் பார்க்கும் போது எனக்குப் பாவமாக இருந்தது.
பீடங்களில் பல புத்தர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். யார் கெளதம புத்தர், மற்றவர்களெல்லாம் யார் யார் என்று தெரியவில்லை.
*
பல புத்தர்களின் கைகளில் தொலைப்பேசி இருந்தன.
அழகான கட்டிடங்கள். திபேத்திய கலாச்சாரத்தில் கட்டப்பட்டு நன்கு பேணப்பட்டு வருகின்றன.
இக்கட்டிடங்களுக்கு
வெளியே நிறைய நிலங்கள் அவர்களுக்காகக் கொடுக்கப்பட்டு நன்கு விவசாயம்
நடக்கிறது. எப்படி நடக்கும் என்றேன். வங்கிகள் நன்கு கடன் கொடுப்பதாகக்
கூறினார்கள். நிலங்களில் கூலிக்காக வேலை செய்வது நமது மக்கள் தான். அவர்கள்
மேற்பார்வை மட்டும் பார்ப்பது போல் தோன்றியது.
*
இடம் பார்த்து முடிந்ததும்
பல கேள்விகள்:
*
திபேத்தியர்களுக்கும் சீனாவிற்கும் நடுவே நிறைய குழப்பங்கள். அரசியல்
நிலையில் இவர்களுக்கு தங்கும் இடம், நிலம், பண உதவி, வங்கிகளின் உதவி
அளிப்பது எதற்காக?
* இந்த உதவிகள் யாரைத் திருப்தி படுத்த? ஏன்? அரசியல் காரணங்கள் உண்டா?
* திபேத் இருப்பதோ வடக்கே எங்கேயோ? அவர்களுக்கு கர்னாடகாவில் ஏன் இந்த இடம் கொடுக்கப்பட்டது?
* பாவம் .. சின்னப் பசங்க. அதாவது இளம் வயது பிக்குகள். பெற்றோரை விட்டு இவ்வளவு தொலைவில் ...
* இந்த உதவிகளுக்கு சீனாவின் எதிர்வினை ஏதும் உண்டா இல்லையா? (இல்லாமல் இருக்காது என்றே நினைக்கிறேன்.)
*
இன்னொரு முக்கிய கேள்வி.
இங்கு இருக்கும் திபேத்தியர்கள் இந்தியாவின் அகதிகள் தானே? இவர்களுக்குத்
தரப்படும் சலுகைகள் கர்நாடக அரசு கொடுப்பதா .. இல்லை மத்திய அரசு கொடுப்பதா
?
இவர்களுக்கு இவ்வளவு சலுகைகள் செய்யும் அரசு ஏன் தமிழ்நாட்டில் இருக்கும் இலங்கை அகதிகளுக்கு இத்தனை உபச்சாரம், உதவி செய்வதில்லை? அவர்களைப் பேணுவதில்லை. தீண்டத்தகாதவர்கள் போல் ஏன் அவர்களை வைத்திருக்கிறோம்?
|
திபேத்தின் நகல் |